'மும்பை புறநகர்ப் பயணிகளுக்கு கட்டண உயர்வு சலுகை'

படத்தின் காப்புரிமை AP
Image caption மும்பை புறநகர் ரெயில் பயணிகளுக்கு சற்று நிம்மதி -- முதல் 80 கிமீக்கு கட்டண உயர்வு இல்லை

மும்பை புறநகர ரயில் சேவையின் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு முதல் 80 கிலோமீட்டர் தொலைவு வரை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு அமலுக்கு வராது என்று ரயில்வே துறை அறிவித்திருக்கிறது.

ரயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்திருந்தது.

நாளை ஜூன் மாதம் 25ஆம் தேதி அன்று அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ரயில் கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த பாஜக மற்றும் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து ரயில் கட்டண உயர்வால் மும்பை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் நல சங்கத்தின் செயலர் கதிர்மதியோன் கருத்து தெரிவிக்கையில், ரெயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அது வரை அரசு பொறுத்திருந்திருக்கலாம் என்றார். கட்டண உயர்வுகள் பட்ஜெட்டில்தான் செய்யப்படவேண்டும் என்று பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது நிலைப்பாடு எடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொது நலன் வழக்கு

பயணிகள் ரயில் கட்டண உயர்வால், மும்பை புறநகர ரயில் சேவையின் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் கிட்டத்தட்ட 186 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்து, இந்த சீசன் டிக்கெட் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பொது நல மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ என்ற நுகர்வோர் அமைப்பு சார்பில் தாக்கல் செயப்பட்ட பொது நல மனுவில் இந்த ரயில் கட்டண உயர்வுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ரயில் கட்டண உயர்வால் மும்பை புறநகர் ரயில்களிள் தினசரி பயணிக்கும் சுமார் 70 லட்சம் மக்கள் குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று மனுவை விசாரித்த நீதிபதி அபேய் ஒகா, ரயில் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று தெரிவித்து, இது தொடர்பில் தற்காலிகத் தடை விதிக்க மறுத்துவிட்டார். அத்துடன் இந்த மனுவின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை மாதம் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மும்பை புறநகரப் பகுதி ரயில் சேவையின் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு முதல் 80 கிலோமீட்டர் தொலைவு வரை எந்த கட்டண உயர்வும் அமலுக்கு வராது என்று ரயில்வே துறை இன்று மாலை அறிவித்துள்ளது.