கிரானைட் குவாரிகளின் சுற்றுச்சூழல் தாக்கம்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Image caption கிரானைட் தொழில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கிரானைட் குவாரி தொழிலால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

தமிழகத்தில் கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டதால், அரசுக்கு மிகப் பெரிய பொருளிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், சூற்றுச்சூழலுக்கும் கேடு விளைந்துள்ளதாக கூறி அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமுக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொது நலன் வழக்கு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாராமன் வாதாடுகையில், பலர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்தி, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக மதுரை பகுதிகளில் இவை அதிக அளவில் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மதுரை தவிர கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் தாது மணல் அள்ளியதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்களால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும் இது தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த குழு பாகுபாடு இல்லாமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் அந்த குழு அமைய வேண்டும் என்றும் கோரினார்.

இந்த மனுவுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூன்று வார காலத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.