சென்னையில் 11-மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

படத்தின் காப்புரிமை

சென்னை போரூரில் மாங்காடு பகுதியில் உள்ள 11 மாடி கட்டிடம் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில் 50 பேர் வரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

சம்பவம் நடந்தவுடனேயே குறைந்தது 6 பேரை அருகிலிருந்தவர்கள் மீட்டுள்ளனர். காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த கட்டிடம் இன்னும் கட்டப்பட்டு வரும் நிலையில் இருப்பதால, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கட்டுமான தொழிலாளர்கள் என்று நம்பப்படுகிறது.

சிக்கியுள்ள கட்டுமான தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணை நடந்துவருவதாகவும் மாங்காடு காவல்துறை அதிகாரி லக்ஷ்மன் பிபிசியிடம் கூறினார்.

ஏரி ஒன்றை ஒட்டி கட்டப்பட்டதாலேயே குறித்த கட்டிடம் சரிந்துள்ளதாக சில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்த கட்டிடத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலேயே அந்த ஏரி இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மீட்புப் பணியை விரைந்து முடிக்க ஏதுவாக, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதுவரை 10 மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.