அம்ஜத் அலி கானின் ‘சரோத்’தை தவறவிட்டது பிரிட்டிஷ் ஏர்வேஸ்

சரோடுடன் அம்ஜத் அலி கான்
Image caption பத்ம விபூஷன் விருது பெற்றவர் சரோட் இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான்.

பிரபல இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான், தனது ‘சரோத்’ இசைக்கருவியை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தவறவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தில்லி வந்தபோதே அவரது அந்த இசைகருவி தொலைந்துபோனதாக அம்ஜத் அலி கூறினார்.

இது குறித்து அவரது ட்விட்டர் கணக்கில் எழுதியுள்ள அவர், ‘கடந்த 1997ஆம் ஆண்டு எனது சரோத்தை சேதப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தற்போது அதனை தவறவும் விட்டுள்ளது. 48 மணி நேரம் ஆகியும் அது குறித்த தகவல்களுக்காக நான் கவலையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கண்டறியப்படவில்லை’, என்று தெரிவித்துள்ளார்.

தொலைந்துப்போனப் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க எல்லா ஏற்பாடுகளையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் சார்பாக பேசவல்லவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் ஏமாற்றத்தை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் முழுமையாக புரிந்து கொள்வதாகவும், அதற்காக அந்நிறுவனம் மிகவும் வருந்துவதாகவும் அவர் கூறினார்.

பெரும் கலைஞர்

68 வயதான இசைக்கலைஞர் அம்ஜத் அலி கான், கடந்த 1960களிலிருந்து சர்வதேச அரங்குகளில் ‘சரோத்’ கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

கடந்த 2001ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சரோத் தான் தற்போது காணாமல் போகியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

பிரிட்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ரபிந்தரநாத் தாகூரின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த ஜூன் 21 ஆம் தேதி லண்டன் சென்றிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து கடந்த சனிக்கிழமை அன்று அவர் இந்தியாவிற்கு திரும்பியபோதே அவரது சரோத் காணாமல் போனது.

இந்த சம்பவம் தொடர்பில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பேசவல்ல ஒருவர், இந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் நடைபெற்றுவருவதாகவும், வாடிக்கையாளர்களின் ஏமாற்றத்தை பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் முழுமையாக புரிந்துகொள்வதாகவும், அதற்காக அந்நிறுவனம் மிகவும் வருந்துவதாகவும் அந்த நிறுவனத்திற்காக பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.