முல்லைப் பெரியாறு அணை: கேரளம் மறுசீராய்வு மனு

முல்லைப் பெரியாறு அணை
Image caption இந்த அணையை புதிதாக கட்ட வேண்டுமென்று கேரளம் வாதிடுகிறது, தமிழகம் எதிர்க்கிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி வழங்கி விடுக்கப்பட்ட இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக திங்களன்று கேரள மாநில அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநில அமைச்சரவையில் இது தொடர்பாக முன்னர் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, அதற்கான மனுவை கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் பாபு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திறந்த நீதிமன்ற விசாரணைக்கு கோரப்பட்டுள்ள அந்த மனுவில், நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இறுதிசெய்து வழங்கிய ஆய்வறிக்கையும் தவறென்று கூறப்பட்டுள்ளது.

மேலும் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அணையின் கீழ் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுக்காப்புக்கு சவால் விடப்பட்டுள்ளதாகவும் மனு தெரிவித்துள்ளது.

கேரளத்தின் வாதம்

மேலும் 1886ம் ஆண்டு போடப்பட்ட முந்தைய ஒப்பந்தம், இந்தியாவில் 1947ம் ஆண்டுக்கு பிறகு முறைப்படுத்தப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு பிறகு காலாவதியாகி விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அந்த அணை தற்போது கேரள மாநில கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னணி

படத்தின் காப்புரிமை AFP
Image caption அணையில் நீரின் அளவை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சட்ட அமர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் உரிமையை பறிக்க கேரளா அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது என்றும், அதனால் கேரளா அரசு வகுத்த சட்டம் செல்லாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து அந்நேரம் வழங்கிய தீர்ப்பில் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது.

இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இவ்வாறு புதிய சட்டங்களை மாநில அரசுகள் வகுப்பது தவறு என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை உறுதி செய்ய மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கவும் வலியுறுத்தியது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதற்கான மேற்பார்வைக் குழுவை அமைக்க இந்திய அமைச்சரவை கடந்த 18ம் தேதி அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.