கச்சத்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை : மத்திய அரசு வாதம்

  • 1 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை splarrangemnt
Image caption கச்சத்தீவு

கச்சத்தீவுப் பகுதி கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமையில்லை என்று மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மோடி தலைமையிலான புதிய மத்திய அரசும் இவ்வாறு கூறியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பு வகித்த போதும், இந்த வழக்கின் விசாரணையில் இதே போன்ற விளக்கம் அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 1974ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒப்பந்தத்தில்இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், இந்திய மீனவர்கள் கச்சதீவுப் பகுதியில் பாரம்பரிய வழக்கப்படி மீன்பிடி வலைகளை உலர்த்திக்கொள்ளவும், அந்த பகுதியில் இளைப்பாறிச் செல்லவும் மட்டுமே உரிமையுள்ளதாக தெளிவுப்படுத்தியது.

படத்தின் காப்புரிமை bbc
Image caption கச்சத்தீவு அந்தோனியார் ஆலயம்

மீனவர்கள் பாதுக்காப்பு பேரவை என்கிற அமைப்பின் தலைவர் பீட்டர் ராயப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்பு மத்திய அரசு கொடுத்த விளக்கத்திற்கு எதிராக வாதாடப்பட்டது.

முந்தைய காங்கிர கட்சி தலைமையிலான மத்திய அரசு இந்த வழக்கிற்காக அளித்த விளக்கத்தில் 1974ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, 1976ம் ஆண்டு முதல் அப்பகுதிகளில் இந்தியா கப்பல் செலுத்துவதை நிறுத்தியதை சுட்டிக்காட்டியதோடு, இந்திய நாட்டு மீனவர்களுக்கு கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமையில்லை என்றும் விளக்கம் அளித்தது.

இதற்கு எதிராக தற்போது நடைபெற்ற மனுதாரரின் வாதத்தின் போது, 1974ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட உரிமைகளை மாற்றி தவறான தகவல்களை கூறுவதாக முறையிடப்பட்டது.

மேலும் இந்த குறிப்பிட்ட ஒப்பந்தம் தொடர்பாக 1974ம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுவரன் சிங், 1974ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி அன்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய போது, கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் மீன்பிடி உரிமையும், இருநாட்டு மக்களுக்கும் அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வழிப்பாடு நடத்த உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்து வாதாடப்பட்டது.