சென்னை விபத்து: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

  • 2 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை AFP GETTY
Image caption இடிந்து விழுந்த சென்னை கட்டிடம்

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பில், தமிழக அரசு தரப்பு விளக்கத்தை இரண்டு வாரங்களுக்குள் தம்மிடம் அளிக்கக் கோரி இன்று புதன்கிழமை இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தீவிரமான மனித உரிமை மீறல் பிரச்சனையாக கருதப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைப் புறநகர்ப் பகுதியான மவுளிவாக்கத்தில் அமைந்துள்ள 11 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

உயிருடனும் பலர் மீட்கப்பட்டு வரும் சமயத்தில், இந்த பணி இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடரும் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு கூறுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் கருத்து கூறிய தமிழக முதல்வர், கட்டிட கட்டுமானப் பணியில் விதி மீறல்கள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், சரியான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருக்கக் கூடும் என்றும், அதன் காரணமாக தான் இந்த விபத்து நடைபெற்றிருக்க கூடும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து தான் தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஒரு சில ஊடகங்களில், இந்த விவகாரம் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்காமல் தவறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் கூறி, தமிழக முதலவர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

" சட்டங்கள் இருக்கின்றன, அமலில்தான் பிரச்சனை"

சென்னையில் நடந்த அடுக்குமாடி கட்டிட விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கட்டிட விதிமுறைகள்படி கட்டப்பட்டுவருகின்றனவா, இந்த விதிமுறைகள் , கட்டிடப் பாதுகாப்பை உறுதி செய்யப் போதுமானவையாக இருக்கின்றனவா, கட்டிடங்கள் கட்டப்படுமுன், மண்பரிசோதனை, கட்டப்படும் இடம் பொருத்தமானதா என்பவை ஆராயப்பட்டு அனுமதிகள் தரப்படுகின்றனவா, என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் , இந்திய கட்டுமானக் கலைஞர்கள் கழகத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சி.ஆர்.ராஜு .

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டிடத் தொழிலாளர் சங்க ஆர்வலர் கருத்து

இந்தியாவில் கட்டிடத் தொழிலாளர்களின் நலன்களைக் காக்க இரண்டு முக்கியச் சட்டங்கள் இருந்தாலும், அவை பின்பற்றப்படாததே இந்த விபத்துக்கு ஒரு முக்கியக் காரணம் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தேசியக் கட்டிடத் தொழிலாளர் கூட்டமைப்பின் கூடுதல் பொதுச் செயலர் ஆர் கீதா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது, அதை கண்காணிக்க போதிய அதிகாரிகள் இல்லாததும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் என அவர் கூறுகிறார்.

கட்டிடத் தொழிலாளர் நல வாரியத்தில் போதிய அளவுக்கு நிதி இருந்தாலும், அத்தொழிலில் பணியாற்றுபவர்கள் அதில் பதிவு செய்து கொள்ளாததும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன எனவும் கீதா கூறினார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்