சசி தரூர் மனைவி மரணம் : "மருத்துவர்மீது அழுத்தம் இல்லை "

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுனந்தா புஷ்கர் மரணம்: பிரேத பரிசோதனை குறித்த சர்ச்சை

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் இறந்த மனைவி சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சையில், அந்த பிரேத பரிசோதனை முடிவுகளைத் திருத்தும்படி எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம் தில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் அறையில் இறந்து கண்டெடுக்கப்பட்டார்.

இறந்த சுனந்தா புஷ்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் சுதிர் குப்தா, சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சில விவரங்களை மாற்றி அமைக்குமாறு தனக்கு அழுத்தம் தரப்பட்டது என்று செய்தி ஊடகம் ஒன்றிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அத்துடன் சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மத்திய சுகாதார துறை அமைச்சகத்திற்கு அவர் இது தொடர்பில் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தச் செய்திகள் தொடர்பில் விளக்கம் அளித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் நீரஜா பட்லா, டாக்டர் சுதிருக்கு இந்த விவகாரம் தொடர்பில் அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படும் செய்திகள் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த மற்றொரு மருத்துவருக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு சுதிர் குப்தா எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரிவித்திருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் நீரஜா பட்லா இதுவே அவரது தவறான குற்றச்சாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் மறைமுகமாக எழுப்பியுள்ளார்.

"டாக்டர் சுதிர் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகளை எய்ம்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக மறுக்கிறது. சுனந்தா புஷ்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திருத்தங்கள் ஏற்படுத்துமாறு எவரும் டாக்டர் சுதிருக்கு அழுத்தம் தரவில்லை. இதே சமயம் புது தில்லியில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் முன் டாக்டர் சுதிர் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தடயவியல் துறையைச் சேர்ந்த மற்றொரு மருத்துவருக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு சுதிர் குப்தா எதிர்ப்பு தெரிவித்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுவருகிறது", என்றார் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் நீரஜா பட்லா.

இதற்கிடையில் இந்த சர்ச்சை தொடர்பில் தனது ஃபேஸ்புக் கணக்கில் கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், தனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து முழுமையான, தெளிவான விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார். விரைந்து விசாரித்து, தெளிவான முடிவுக்கு வந்தால் மட்டுமே இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.