சென்னை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

  • 3 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை AFP GETTY
Image caption கட்டிட விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன

சென்னையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 6வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள், தனியார் மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆந்திரா, ஒரிசா மாநில அரசுகளுடன் இணைந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டாலும், சில உடல்கள் சிதைந்திருப்பதால், அவர்களது உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மீட்பு பணிகள் முழு மூச்சில் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது என்று ஒரு மூத்த தமிழ்நாடு அரசு வருவாய்துறை அதிகாரி வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.

விசாரணை ஆணையம் நியமனம்

இதனிடையே, விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராயவும் இனிமேல் இம்மாதிரி விபத்துகள் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிவிப்பதற்காகவும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமிப்பதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை மவுலிவாக்கம் பகுதியில், கட்டப்பட்ட நிலையில் இருந்து வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்தபோது, கட்டடத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த இடிந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த ‘பிரைம் சிரிஷ்டி ஹவுசிங் லிமிடிட்’ என்கிற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த பொறியாளர்கள் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்