வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: “ஆதாரம் இன்றி கைது செய்யக்கூடாது”

  • 3 ஜூலை 2014
படத்தின் காப்புரிமை AFP
Image caption தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா சட்டம்?

வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, போதிய ஆதாரமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சட்டம் பழிவாங்கும் நோக்கில் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

இதையடுத்து வரதட்சனை கொடுமை குற்றங்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 41இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுகளை நிறைவேற்றாமல் கைது நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது என்று காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இந்திய வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ வின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடதக்கது.

இது போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான அறிக்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையை தீர விசாரித்த பின்னர் திருப்தியடைந்தால் மட்டுமே கைது செய்வதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறினால் நடவடிக்கை

இந்த அறிவுரைகளுக்கு ஏற்ப காவல்துறையினர் நடக்காவிட்டால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது அந்தந்த துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூட பதிவு செய்யப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் திருமண மோதல்களில் பெருமளவில் அதிகரிப்பு எற்பட்டுள்ளதாகவும் நீதிபதி பிரசாத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க இந்த உத்தரவு உதவும் என மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.