திமுக கூட்டணியில் இருந்து முஸ்லீம் லீக் விலகலா?

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி (ஆவணப்படம்)
Image caption நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதி (ஆவணப்படம்)

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறாமல் போனதற்கு திமுகவின் வேலூர் பகுதி முக்கிய பிரமுகரும் திமுக தலைமை நிலையச்செயலாளர்களின் ஒருவருமான துரை முருகன் முக்கிய காரணம் என்று அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் சார்பில் வேலூர் தொகுதியில் தனது மகனை போட்டியிட துரைமுருகன் முயன்றதாகவும், அவரது விருப்பம் கட்சித்தலைமையால் ஏற்கப்படாமல் போன நிலையில் வேலூர் தொகுதி முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்ட பிறகு துரைமுருகன் உள்ளிட்ட உள்ளூர் திமுகவினர் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்த தேர்தலில் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே எம் காதர்மொய்தீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

துரைமுருகன் உள்ளிட்டவர்களின் இந்த செயல்பாடு தமது கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய காதர் மொய்தீன், தமது கட்சியினரின் மனக்குமுறல்களை திமுக தலைமைக்கு விரைவில் நேரில் சந்தித்து தெரியப்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேசமயம், இந்த ஒரு பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியில் இருந்து முஸ்லீம் லீக் விலகாது என்று கூறிய காதர் மொய்தீன், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் பிணக்குகள் எல்லாம் விவாகரத்தில் போய் முடிவதில்லை என்று தெரிவித்தார்.

இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் இருக்கும் முஸ்லீம்களின் வாக்குகள் மட்டுமே தமது கட்சிக்கு கிடைத்ததாகவும், திமுகவின் வாக்குகள் பெருமளவு பாஜக கூட்டணி வேட்பாளருக்கு சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார். கண்ணுக்குத் தெரியாத மோடி அலை ஒன்று தமிழ்நாட்டில் இருந்ததாகவும் அவர் கூறினார். அதுவும் கூட தமது கட்சியின் தேர்தல் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை