தேர்தல் ஆணையம் முறைதவறி நடந்தது: திமுக புகார்

கனிமொழி படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption திமுக சார்பில் கனிமொழி மகஜர் கொடுத்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியத் தேர்தல் ஆணையம் முறைகேடாகவும் பக்கச்சார்பாகவும் நடந்ததாக முறையிட்டு திமுக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு புதுதில்லியில் குடியரசுத் தலைவரிடம் வெள்ளிக்கிழமையன்று இந்த மகஜரைக் கையளித்துள்ளார்.

அண்மையில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தும், தமிழ்நாட்டுக்கான தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரும் அதிமுக கட்சிக்கு பக்கச்சார்பாக நடந்துகொண்டார்கள் என்றும், அதிமுக வெற்றிக்கு வழிகோலும் விதமாக தமது அதிகாரத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்றும் திமுக மகஜரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அதிமுக பெற்றிருந்த வெற்றி நியாயமான முறையில் பெறப்பட்ட நிஜமான வெற்றி அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் மோசமான அதிகார துஷ்பிரயோகத்தின் விளைவாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நினைவுத்திறனை முறைகேடாக திருத்தி பெறப்பட்ட சட்டவிரோதமான வெற்றி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த பொத்தானை அழுத்தினாலும் வாக்கு இரட்டை இலை சின்னத்திலேயே விழும் எனும் விதமான திருத்தம் தேர்தல் ஆணையத்தின் ஒத்திசைவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்டிருந்தன என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

ஆட்சியிலுள்ள அதிமுக மாநில அரசு இயந்திரத்தை தமது கட்சிக்காக பயன்படுத்திக்கொண்டதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு ஆதாரம் என்று அந்த கட்சி கருதும் சில குறிப்பிட்ட சம்பவங்கள், செய்திகள், தகவல்கள் இந்த மகஜரில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணையர் மீது பிற அதிகாரிகள் மீதும் உரிய விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரை இந்த மகஜர் கோருகிறது.

திருத்தப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பழுதாகிவிட்டதாக சாக்குச் சொல்லி அழிக்க தேர்தல் ஆணையம் முயலுகிறது என்றும், விசாரணைகள் முடியும் வரை அவ்வாறான இயந்திரங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் திமுக பொதுச் செயலர் க. அன்பழகன் கையொப்பமிட்டுள்ள இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.