இராக்கில் சிக்கியிருந்த செவிலியர்கள் 'சனிக்கிழமை இந்தியா வந்தடைவார்கள்'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மோதலில் சிக்கிய நர்ஸ்கள் வசித்த திக்ரித் நகரில் தீவிரவாதிகள் ( ஆவணப்படம்)

இராக்கில் நடந்துவரும் மோதல் காரணமாக, திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்த நிலையில், அங்கு சிக்கியிருந்த இந்திய செவிலியர்கள் அனைவரும் விடுதலையாகி நாளை சனிக்கிழமை காலை இந்தியா வந்தடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்திய செவிலியர்கள் 46 பேரும் இன்று இரவுக்குள் எர்பில் நகரத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் கூறினார்.

இந்தியாவிலிருந்து புறப்படும் சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று இரவு எர்பில் நகர விமான நிலையத்தை சென்றடையும் என்றும், அதில் இந்த 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட, அந்த நகரத்திற்கு வந்தடைந்துள்ள ஏனைய 70 இந்தியர்களும் இந்தியா திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார்.

எர்பில் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம் முதலில் கொச்சின் விமான நிலையத்தை வந்தடைந்து, பின்னர் புதுடில்லி செல்லும் என்றும் சையத் அக்பருதீன் கூறினார்.

இந்த மீட்புப்பணிக்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகள் அந்த விமானத்தில் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து இராக்கில் சிக்கித்தவிக்கும் மற்ற இந்தியர்களை மீட்பதற்கும் வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக, இன்று முற்பகல் பிபிசி தமிழோசையிடம் பேசிய கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர்களுடன் தாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக கூறினார்.

இந்தியாவிலிருந்து புறப்பட்டு செல்லும் விமானத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரும் செல்வார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இந்திய செவிலியர்கள் 46 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் சிலர் ஊடகங்களுக்கு இன்று காலை முதல் உறுதியாக தெரிவித்து வந்தனர்.

இராக்கில் சிக்கியிருந்த இந்திய செவிலியர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த மோனிஷா என்பவரது உறவினர் ஜனார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் பேசினார்..