பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக அமித் ஷா நியமனம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அமித் ஷா நியமனத்தின் மூலம் கட்சியிலும் அரசிலும் மோதிக்கு முழு கட்டுப்பாடு

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோதியின் நண்பர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைவரான ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராகிவிட்ட நிலையில், 49 வயதாகும் அமித் ஷா தலைவராக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான அமித் ஷா, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவினால் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அமித் ஷா ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக, ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பெரும் வெற்றிக்கு அமித் ஷா முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய அரசியல்வாதி

சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான அமித் ஷா, 2005ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இஸ்லாமியர் ஒருவரைக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

2010ஆம் ஆண்டு, ஷொராபுதீன் ஷேக் என்பவரை கடத்திக் கொலைசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்று மாதங்கள் சிறையில் இருந்த பிறகு அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், ஷா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.

மோதிக்கு முழு கட்டுப்பாடு

சிறந்த அமைப்பாளராகக் கருதப்படும் அமித் ஷா, நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் பாரதிய ஜனதாக் கட்சி 71 இடங்களைக் கைப்பற்றியது.

பிரச்சாரத்தின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக “வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால்” அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

“இழிவான, மோசமான” முறையில் பேசப்போவதில்லை என அவர் வாக்குறுதியளித்ததையடுத்து அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்து தேசியவாத அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் நீண்ட கால உறுப்பினரான அமித் ஷா, பா.ஜ.கவின் சித்தாந்திகளில் ஒருவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக மோதிக்கு நெருக்கமானவர்.

அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், மோதிக்கு, கட்சியிலும் அரசிலும் முழு கட்டுப்பாடு கிடைக்கும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.