அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ நியமன விவகாரம்: விளக்கம் கோருகிறது உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை AFP
Image caption அரசு தரப்பு, அர்ச்சனா தரப்பு விளக்கங்களை உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.

தமிழக காவல்துறையின் உயர் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் வரும் 17ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி திங்கள்கிழமையன்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜாராகி வாதாடினார்.

அவரது வாதத்தின்போது, தமிழக அரசு இவரை பணியிலிருந்து விடுவிப்பது குறித்து முடிவு எடுத்து அனுமதி வழங்குவதற்கு முன்பாக மத்திய புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றது தவறு என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அர்ச்சனா ராமசுந்தரம் தரப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தமிழக அரசிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் இவரது புதிய நியமனம் குறித்து காலங்கடந்தும் தமிழக அரசு தரப்பு பதிலளிகவில்லை என்றும் கூறியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தமிழக அரசு தரப்பை கூடுதல் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரிய அந்த அமர்வு, அதற்கு மத்திய அரசு மற்றும் அர்ச்சனா ராமசுந்தரம் ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கங்களை வரும் 17ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரியது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் தொடர்பாக சமூக ஆர்வலர் வினீத் நாராயண் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பாக கடந்த மே மாதம் 9ம் தேதி விசாரணைக்கு வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக காவல்துறையின் உயர் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநராக பணிபுரிவதற்கும் தடை விதித்தது. தமிழக அரசு தரப்பிலும் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், அர்ச்சனா ராமசுந்தரத்திற்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை தற்போதும் நீடிக்கிறது.