காவிரி நீர் பங்கீடு குறித்த மனுக்களை ஏற்க தீர்ப்பாயம் மறுப்பு

காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநில அரசுகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது காவேரி தீர்ப்பாயம் இது தொடர்பான மனுக்களை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளது.

காவேரி தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று செவ்வாய்கிழமை நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், என்.எஸ்.ராவ் மற்றும் சுதிர் நாராயன் ஆகியோர் முன்பாக நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் வினோத் பாப்டே, தீர்ப்பாயத்தின் சட்டப்பிரிவு 5ன் கீழ் 3ன் படி 14 கோரிக்கைகளை முன்வைத்து வாதாடினார்.

பின்னர் கர்நாடக மாநில அரசு தரப்பில் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் அணில் திவான், காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான மாநில அரசுகளின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருதாக குறிப்பிட்டார்.

இதனால் உடனடியாக இந்த மனு மீதான விசாரணையை காவேரி தீர்ப்பாயம் மேற்கொள்ள கூடாது என்றும் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணையை இந்த தீர்பாயத்தில் தொடர்வதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள்.

எனவே இந்த விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உருவாகியுள்ளது.

காவேரி தீர்ப்பாயத்திற்கான தலைவர் பதவி கடந்த 2012ம் ஆண்டு முதல் காலியாக இருந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டு வந்தது. தற்போது புதிய தலைவராக நீதிபதி பி.எஸ்.சௌஹான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த காவேரி தீர்ப்பாயம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த தீர்ப்பாயம் உடனடியாக எந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெளிவு செய்துள்ளது.