ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேட்டி விவகாரம்: திமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லையென ஜெயலலிதா குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை PTI
Image caption ஜெயலலிதா

சென்னையில் இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் வேட்டி கட்டிச் செல்ல இருக்கும் தடை குறித்து முந்தைய திமுக ஆட்சியில் தமிழக அரசிடம் இரண்டுமுறை புகார்கள் அளிக்கப்பட்டும் அப்போதைய முதல்வர் மு கருணாநிதியோ துணை முதல்வர் மு க ஸ்டாலினோ இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால், கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் சங்க கிளப்பின் செயலுக்கு ஏற்கனவே திமுக தலைவர் மு.கருணாநிதியும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இது தொடர்பான சட்டமன்ற விவாதத்தில் பேசிய மு க ஸ்டாலினும் கிரிக்கெட் சங்கத்தின் நடத்தையை கண்டித்திருந்தார்.

இவர்களின் கருத்துக்களுக்கு தமிழக சட்டமன்றத்தில் பதில் அளித்து பேசிய ஜெயலலிதா, இன்று வேட்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியும், துணை முதல்வர் மு க ஸ்டாலினும் தங்கள் ஆட்சியின்போது இது தொடர்பாக ஒன்றுக்கு இரண்டு முறை இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோதும், அவர்கள் இதில் தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.