'இந்திய சிவில் சர்விஸ் தேர்வுகளில் மொழிப் பாகுபாடு இருக்காது''

வட இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்தனர் படத்தின் காப்புரிமை
Image caption வட இந்திய மாணவர்கள் மொழிப்பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் செய்துவந்தனர்

யு.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் மொழி வாரியான பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதல்கட்ட தேர்வுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள முந்தைய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கூறினார்.

அந்தக் குழு அளிக்கின்ற ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

குறித்த ஆய்வறிக்கையை முடிந்தவரை விரைவில் தாக்கல் செய்யுமாறு அந்த மூவர் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொடக்கநிலைத் தேர்வில், ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் கேட்கும் முறையை ரத்து செய்யக்கோரி வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அவர்கள் புதுடில்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். பின்னர் மத்திய அரசு கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள் தற்காலிகமாக போராட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய அரசாங்க பொறுப்புகளாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வில், ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகளை கேட்கும் முறையால் தகுதி வாய்ந்த பலருக்கு அது சிக்கலை உண்டாக்கியுள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.