கட்ஜுவின் கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம்

Image caption கட்ஜுவின் கருத்துக்கு தி.மு.க. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நீதிபதி ஒருவர் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் அழுத்ததின் காரணமாக, உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்து, இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமையன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீதிபதியாக பல ஆண்டு காலம் இருந்தவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் பற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு புழுதிவாரி இறைத்திருப்பது, நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி என்றுதான் கூறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “கட்ஜுவின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடியவர்; நீதிபதிகளுக்கே உரிய நடுநிலை தவறி, பொறுமையிழந்து கருத்து சொல்லக்கூடியவர்; முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும்; இப்போது அவர் சொல்லியிருப்பது யாருக்கு உதவுவதற்காக என்பதை எவரும் எளிதில் புரியது கொள்ளலாம் என்றும் கருணாநிதி தனது கடித்ததில் தெரிவித்துள்ளார்.

கட்ஜுவின் குற்றச்சாட்டு

Image caption முன்னாள் நீதிபதி கட்ஜுவின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, இணையத்தில் எழுதிய குறிப்பு ஒன்றில், தமிழகத்தில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாவட்ட நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் தவறு செய்ததாக அவருக்கு எதிராக எட்டுப் புகார்கள் வந்தன என்றும் அந்த எட்டு புகார்களையும் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் அழித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அந்த நீதிபதிக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவரின் ஆதரவு இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த அரசியல் கட்சி தந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் தி.மு.கவின் பெயரை மார்க்கண்டேய கட்ஜு வெளிப்படையாக குறிப்பிடாத நிலையில், தி.மு.க. தலைவர் இது குறித்து பதிலளித்திருப்பது ஏன் என்று தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது, “கட்ஜு தனது இணையக் குறிப்பில், தி.மு.கவின் பெயரை குறிப்பிடவில்லை என்பதால், நாங்கள் ஏதும் சொல்லவில்லை. ஆனால், பத்திரிகைகளும், நாடாளுமன்றத்தில் சில கட்சிகளும் தி.மு.கதான் அந்த அரசியல் கட்சி என்று கூறியிருக்கும் நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புயல்

நாடாளுமன்றத்தில் மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்துக்கள் குறித்து இன்று விவாதிக்க வேண்டுமெனக் கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, மக்களவையும் இதே விவகாரத்தின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து, பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “அப்போதைய சட்ட அமைச்சர் இது குறித்து என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சொல்லிவிட்டார்; இதைத் தவிர நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ்; உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி, சில எம்.பி.க்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான். அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லகோத்தியின் ஒப்புதலுக்குப் பிறகே சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிக்க பட்டது என்று கூறியிருந்தார்.