குற்றவாளிகளை விடுவிக்கும் மாநில அரசு அதிகாரம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில் மாநில அரசுகள் தானாக முன்வந்து குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சியை தடுக்கும் சட்ட உட்பிரிவினை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

அந்த மனுவில் அவரது விடுதலைக்கு தடையாக அமைந்து உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 கீழ் உள்ள உட்பிரிவு 1ஏ-வை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.ஏம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையில், மனுதாரரான நளினி தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவினை மாநில அரசுகள் எடுப்பதற்கு அவசியமாக மத்திய அரசிடம் கருத்து கேட்கக்கூறும் சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தினார்.

மேலும் மத்தியப் புலனாய்வுத் துறை எனப்படும் சிபிஐ விசாரணை மேற்கொண்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை மட்டும் தனியாக பிரித்து பார்ப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்றும் வாதாடினார்.

இதனைத்தொடர்ந்து இந்த மனு தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த அமர்வு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பான முக்கிய வழக்கின் விசாரணை கடந்த 9ம் தேதி இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு துவங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் ஜூலை 18ம் தேதிக்குள் பதிலளிக்க அந்த அமர்வு கோரியது. இந்த சமயத்தில் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியான நளினி, தற்போது இவ்வாறு மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.