பாலியல் வல்லுறவு சம்பவம், வேறு இருவர் கைது

படத்தின் காப்புரிமை AP
Image caption பாலியல் வல்லுறவு சம்பவம்- வேறு இருவர் கைது

பெங்களூரில் 6 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவ விசாரணையில் புதிய திருப்பமாக, இதற்கு முன்னர் குற்றவாளி என்று நம்பப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்தஃபா என்னும் அப்பள்ளியின் ஸ்கேடிங் பயிற்சியாளர் குற்றவாளி இல்லை என்று தற்போது பெங்களூர் காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டின்பேரில், வேறு இரண்டு உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள விப்கயோர் உயர்நிலை பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி அன்று 6 வயது சிறுமி பள்ளி வளாகத்தில் பள்ளி ஊழியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அந்த பள்ளியில் பணிபுரியும் முஸ்தஃபா என்ற ஸ்கேடிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். அவரது மடிக் கணினியில் அநாகரீகமான குழந்தை காணொளிகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். கடந்த வாரம் அந்த பள்ளியின் தலைவரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பவ நேரத்தில் சம்பவ இடத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள பெங்களூர் காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி, பாலியல் வல்லுறவு சம்பத்திற்கு பொறுப்புடைய இரண்டு பேரை காவல் துறை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவு டி மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டப் பிரிவு நான்கு மற்றும் ஆறு ஆகியவையின் கீழ் இந்த இரண்டு உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டிருப்பது ஆறு வயது சிறுமி என்பதால் அதிர்ச்சியில் இருக்கும் அந்த குழந்தையிடமிருந்து சம்பவ விவரங்களை முழுவதுமாக பெற முடியவில்லை என்பதாலேயே, முழுமையாக விசாரித்து இந்த சம்பவத்தின் குற்றவாளிகளை கைது செய்ய சில நாட்கள் ஆனது என்று பெங்களூர் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் மேலும் ஒரு பாலியல் வல்லுறவு சம்பவம்

இதற்கிடையில் இந்திய தலைநகர் தில்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி அன்று பத்தாவது வகுப்பு மாணவி ஒருவர் துப்பாக்கி முனையில் வைத்து 5 பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் படம் பிடித்துள்ளதாகவும், அதை வைத்து அந்த நபர் தன்னை மிரட்டி வருவதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

குற்றம் புரிந்ததாக கூறப்படும் 5 பேரில் இரண்டு பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னரே நேற்று அந்த மாணவி தனது பெற்றோரிடம் சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதனையடுத்து அந்த 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் அந்த 18 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேருடன் சேர்த்து மொத்தம் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மீதம் உள்ள இரண்டு சந்தேக நபர்களைத் தேடும் பணியில் அப்பகுதி காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.