பூனே நிலச்சரிவு: இறந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆனது

படத்தின் காப்புரிமை AP
Image caption நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆனது

இந்தியாவின் புனே நகருக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்துள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்பட்டுவருகின்றனர். கிட்டத்தட்ட 40 வீடுகள் அந்த சேற்றில் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மஹராஷ்ட்ர மாநிலத்தின் புனே நகருக்கு அருகே உள்ள மாலின் என்ற கிராமத்தில் கடும் மழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு ஆறு மாத குழந்தையும்,அக்குழந்தையை அணைத்து கொண்டிருந்த தாயும் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று விடியற்காலை ஏற்பட்ட இந்த இயற்கை பேரழிவில் நூற்றுக்கணக்கானோர் இன்னும் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இரவு முழுவதும் மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் பெய்த மழை மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தது. இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றுவந்த மீட்பு பணிகளும் கடும் மழையால் பாதிக்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப்படையின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதனன்று விடியற்காலை அக்கிராமத்தின் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையால் இந்தியாவின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது சகஜமான ஒன்று.

இந்த மாலின் கிராமத்திற்கு அருகே இருந்த மலையின் ஒரு பெரிய பகுதி சரிந்ததில் 150க்கும் அதிகமான மக்கள் அந்த தளர்வான பூமி மண் மற்றும் பாறைகளுக்கு இடையே புதைந்தனர். மலையில் இருந்த எல்லாமே சரிந்து கீழே வந்ததாக அம்மாவட்ட உயர் அதிகாரி சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.