11 பேர் பலியான மதில் சுவர் இடிந்த சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழக தலைநகர் சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டிட மதில் சுவர் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Image caption ஜூலை 5ஆம் தேதி சுவர் இடிந்ததில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்ற விபத்து தொடர்பாக பெறப்பட்டுள்ள புகாரை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தன்னிடம் தரப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், உப்பரபாலயம் கிராமத்தில் அமைந்துள்ள சேமிப்புக் கிடங்கு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கட்டிடகட்டுமான பணியாளர்கள் 11 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் சிலர் காயமுற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அந்த பகுதியில் இன்னமும் பல்வேறு சேமிப்பு கிடங்குகள் முறையான அங்கீகாரம் பெறமால் கட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கட்டிடங்கள் தமிழக அரசின் நீர்நிலை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட, கட்டிடங்கள் கட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்ட ஏரிப் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான, நீதிபதி முருகேசன் இந்த புகாரை உற்றுக் கவனித்ததில் இது தீவிர மனித உரிமை மீறலை எழுப்பக்கூடிய விவகாரமாக கண்டுள்ளதாகவும் அதனாலேயே தமிழக அரசின் தலைமை செயலாளர் இது தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதியான மௌலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி 61 உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற ஒரு வாரக்காலத்தில், தொடர்ச்சியாக இந்த கட்டிட சுவர் இடிபாடு நடைபெற்றதாக மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அத்தோடு தமிழக அரசு இது போன்ற விவாகரங்களில் கட்டிட பணியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை கண்காணிக்கத் தவறி விட்டதாகவும், இதனால் எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிவிட்டதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை ஆணைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.