புனே நிலச்சரிவு: 50க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு

Image caption நிலச்சரிவிலிருந்து இனி யாரும் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவுக்கு அருகில் மாலின் கிராமத்தில் புதன்கிழமையன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இனி யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மோசமான வானிலையின் காரணமாக மீட்புப் பணிகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று அதிகாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இதில் சிக்கிக்கொண்டனர்.

முதல் சில மணி நேரங்களில் 8 பேர் வரை மீட்கப்பட்டனர். ஆனால், கடந்த 40 மணி நேரத்தில் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

மாலின் கிராமத்தை ஒட்டியிருந்த குன்று சரிந்து, கிராமத்தின் மீது விழுந்தது. இதில் அங்கு வசித்த 150-200 பழங்குடியின மக்கள் மண், பாறை, சகதிக் குவியலுக்குள் சிக்கிக்கொண்டனர்.

“அற்புதங்கள் நிகழும் என்றாலும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது” என தேசியப் பேரிடர் மீட்புப் படையின் பிராந்திய தளபதியான ஆலோக் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மோசமான வானிலை மீட்புப் பணிகளை தாமதப்படுத்துகிறது.

இதுவரை 51 உடல்கள் மீட்பு

வெள்ளிக் கிழமையன்று மீட்புப் படையினர் மக்கள் அதிகம் வசித்த பகுதியை அடைந்துவிட்டதாகவும் தொடர்ந்து தோண்டி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 51 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 22 பேர் பெண்கள். 6 பேர் குழந்தைகள்.

இந்த விபத்தில் தப்பியவர்கள், இடிபாடுகளுக்குள் கிடக்கும் தங்கள் உடமைகளை மீட்க முயன்றுவருகின்றனர்.

மீட்கப்பட்ட எட்டு பேரும் மாலினிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மஞ்சார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தப் பக்கமாகச் சென்ற ஒரு பேருந்து ஓட்டுனர் மண் குவியலுக்குள் கிராமம் புதைந்து கிடைப்பதைப் பார்த்து தகவல் அளித்ததும்தான் மாலினில் நடந்த இந்தப் பேரழிவு குறித்து, வெளியுலகிற்குத் தெரியவந்தது.

அந்தப் பகுதியில் கடுமையான மழை பெய்ததால், புதன், வியாழக்கிழமைகளில் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.