லிபியாவிலிருந்து இந்தியச் செவிலியர்கள் நாடு திரும்பினர்

படத்தின் காப்புரிமை kerala government
Image caption 40க்கும் மேற்பட்ட இந்திய செவிலியர்கள் செவ்வாய்க்கிழமையன்று நாடு திரும்பினர்.

உள்நாட்டு யுத்தம் நடக்கும் லிபியாவில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்ட இந்திய செவிலியர்கள் நாடு திரும்பியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அவர்கள் கொச்சி வந்தடைந்தனர்.

லிபியாவின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த இந்தச் செவிலியர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பாக, டுனீஷியா வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கிளம்பி, செவ்வாய்க்கிழமையன்று காலையில் கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.

வடஆப்பிரிக்க நாடான லிபியாவில் நடைபெற்றுவரும் மோதலில் கடந்த சில வாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லிபியாவின் தலைநகரான ட்ரிபோலியிலும் மற்றொரு முக்கிய நகரான பென்காஸியிலும் 1,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இன்னும் பல செவிலியர்கள் அந்த நாட்டில் சிக்கித் தவித்துவருவதாகவும் சில நாட்களில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் சிக்கியிருந்த செவிலியர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

ஈராக்கின் உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த 46 இந்தியச் செவிலியர்கள் சில வாரங்களுக்கு முன்னதாக நாடு திரும்பியிருந்தனர்.

வெளிநாடு வாழ் கேரள மக்கள் விவகாரத்துறையின் அதிகாரியான பி. சுதீப், 44 செவிலியர்களும் செவ்வாய்க்கிழமையன்று காலையில் வந்து சேர்ந்ததாக பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக, லிபியாவிலிருந்து வெளியேற விரும்புபவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கேரள முதலமைச்சர் ஒம்மன் சாண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.

பல நாடுகள் லிபியாவிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றிவிட்டன.

பிரிட்டன் தனது கடற்படைக் கப்பலைப் பயன்படுத்தி தன் குடிமக்களை லிபியாவிலிருந்து மால்டாவுக்குக் கொண்டுவந்தது.

கடந்த வாரம், ட்ரிபோலியிருக்கும் தனது தூதரகத்தை போர் அச்சுறுத்தலின் காரணமாக அமெரிக்கா காலி செய்தது. ஐ.நா.வும் தனது ஊழியர்கள் அனைவரையும் லிபியாவிலிருந்து வெளியேற்றிவிட்டது.

அதிபராக இருந்த முவம்மார் கடாஃபி 2011ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, பல்வேறு போட்டிக் குழுக்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.

நாடாளுமன்றம் நியமித்த ராணுவத்திற்கும் பாதுகாப்பு அமைச்சகம் நியமித்த ராணுவத்திற்கும் இடையிலான மோதல் சமீபகாலமாக வடக்கு நோக்கி பரவிவருகிறது.