பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது- மோடி குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AFP
Image caption நரேந்திர மோடி

இந்தியாவுடன் மரபு வழிப் போரில் வெல்ல முடியாத அண்டை நாடு, தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது போன்ற முறையற்ற தாக்குதல்களினால் இந்தியப் படை வீரர்கள் அதிகளவில் காயப்பட்டும், கொல்லப்படும் வருவதாக இன்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள லெஹ் மற்றும் கார்கில் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர்மின் திட்டங்களை துவக்கிவைத்த பிரதமர் மோடி, லேஹ் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளை இணைக்கும் மின்திறன் செலுத்தும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

லெஹ் நகரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இவரோடு மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வொஹ்ரா, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இந்த விழா நடைபெற்ற போது, பொது மக்கள் மத்தியில் பேசிய அவர் அப்புகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் அம்மாநிலத்தின் நலத்திட்ட பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா உரையாற்றிய போது, இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற உதவி செய்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை தகுந்த நேரத்தில் மன்மோகன் சிங் அரசு ஒதுக்கியதால் தான் விரைவாக முடிவு பெற்றதாகவும் கூறினார்.

அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இந்தியாவின் தலைநகர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்வதற்கு விமான சேவையை பெரிதும் நம்ப தேவை உள்ளதாகவும் கூறிய அவர், மத்திய அரசு அதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரினார். குளிர் காலங்களின் போது, லெஹ் நகரில் இருந்து டில்லி செல்ல 22,000 ரூபாய் அளவுக்கு விமான கட்டணம் விதிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்துள்ள அவர் இன்று தொடர்ந்து லெஹ் நகரில் பாதுகாப்பு படை வீரர்கள் கூடியிருந்த கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியப் ராணுவத்தை வலுப்படுத்தவும், நவீன ஆயுதங்கள் மற்றும் கருவிகளை பெற்றுத்தரவும் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.. படைவீரர்களின் குடும்பத்தினர்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் இவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்த வீரர்களுக்கு மத்திய அரசு பல புதிய சிறப்பு திட்டங்களை தொடர்ந்து வகுத்து வருவதாகவும் அவர் கூறினார். அத்தோடு தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதன் பின்னர் அங்கு கூடியிருந்த பாதுகாப்புப்படை வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடவும் செய்தார்.