'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி வழக்கு மொழியாக வேண்டும்'

Image caption சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரபூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு மொழி பேசுபவர்கள் என்கிற காரணத்தை கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழ் மொழியை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் பரிந்துரையோடு அப்போது விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி வழிவகை செய்யவும் கோரியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் அமைந்துள்ள பெரும்பாலான உயர்நீதிமன்றங்களில் அப்பகுதி மொழியை பின்பற்ற அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் அலுவல் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டு 67 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், ஜனநாயக முறைப்படியான அரசாங்கத்தில் அந்தந்த மாநில மக்களின் உரிமையை நிலைநாட்ட உதவிபுரியவும் கோரியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஒரே குரலாக ஒரே கோரிக்கையை முன்வைத்து வருவதால், இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் விரும்பும் அறிவிப்பை வெளியிட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

இத்தோடு திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்திய மொழிகளின் தினமாக அறிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கொண்டாடத் துவங்குவதன் மூலம் தமிழ் மொழி என்று மட்டும் இல்லாமல், இந்தியாவில் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் வழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க அது வழிவகுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தனது மனு குறித்து, இன்று பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், மொழி கலாச்சாரம் தொடர்பில் வடஇந்திய மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது என்று கூறினார்.

வெவ்வேறு பகுதிகளில் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியில் பேச, எழுத, படிக்க உள்ள உரிமை பேணிக்காக்க படவேண்டும் என்றும், அதற்கு தடையாக உள்ள உறைந்த சுவர்கள் இடிக்கப்பட வேண்டும் என்றார்.