விளைநிலங்களில் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதற்கான தடை நீட்டிப்பு

படத்தின் காப்புரிமை gail.nic.in
Image caption விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு

தமிழகத்தில், கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை விளை நிலங்களில் பதிக்கும் பணிகளை தொடர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் (GAIL), தமிழகம் வழியாக இயற்கை எரிவாயு எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் திட்டத்தினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கெயில் நிறுவனத்தின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடினார்.

அப்போது இந்த திட்டத்தின் பணிகளை தொடர முடியாததால், நிலத்தடியில் புதைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் மற்றும் உபகரணங்கள் வீணாகி வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தெரிவித்தார். எனவே, குழாய்கள் மற்றும் உபகரணங்களை அகற்ற அனுமதி அளிக்குமாறும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறும் கெயில் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குழாய்கள் மற்றும் உபகரணங்களை அகற்ற அனுமதி அளிக்க முன்வைக்கப்பட்டிருக்கும் வேண்டுகோளை தனி ஒரு மனுவாகத் தாக்கல் செய்யுமாறு தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மத்திய அரசு நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் (GAIL) , கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருக்கு , தமிழகம் வழியாக இயற்கை எரிவாயு எடுத்துச் சென்று விநியோகம் செய்யும் திட்டத்தினை முன்னதாக அறிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 310 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கவும், அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் வழியில் தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கவும் கெயில் திட்டமிட்டிருந்தது.

விளை நிலங்கள் வழியே செல்லும் குழாய்களால் விவசாயம் பாதிக்கப்படும் என்றஞ்சிய விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.