14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

  • 19 ஆகஸ்ட் 2014
படத்தின் காப்புரிமை PTI
Image caption தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐரோம் ஷர்மிளா

கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரை விடுவிக்க மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள சர்ச்சைக்குரிய ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த ஐரோம் ஷர்மிளா சானு என்பவரை காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை துவங்கிய உடனேயே அவர் தற்கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டு அவருக்கு மூக்கு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது.

Image caption சிறைச்சாலை மருத்துவமனையில் ஐரோம் ஷர்மிளா

ஐரோம் ஷர்மிளா தற்கொலை முயற்சி செய்கிறார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர் பப்லூ லோயிடங்பாம் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐரோம் ஷர்மிளா தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முயற்சிக்கவில்லை என்று ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர் என்றும், அவர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்யவே அரசியல் மட்டத்தில் தனது நிலைப்பாட்டை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 10 பொதுமக்கள் இந்திய வீரர்களால் கொல்லப்பட்டதை அடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

'மன்சாட்சியின் கைதி'

Image caption அவருக்கு மக்கள் ஆதரவும் உள்ளது

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்படி அதிகாரபூர்வ பிடியாணை இல்லாமல் மக்களை கைது செய்யவும், சில சூழ்நிலைகளில் மக்களை சுட்டு கொல்லவும் இந்திய படை வீரர்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த சட்டத்தை ரத்து செய்யவே கடந்த ஒரு தசாப்தமாக ஐரோம் ஷர்மிளா பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த சட்டம் பெரும்பாலும் தவறாகவே பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை நிறுவனம், ஐரோம் ஷர்மிளாவை ‘மனசாட்சியின் கைதி’ என்று விவரித்ததை அடுத்து அவரது இந்த போராட்டம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது.