மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி: நீதிமன்றம் உத்தரவு

Image caption தமிழக சட்டமன்றம்

தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேருக்கும் தமிழக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இவர்களுக்கு பணி வழங்கப்படவில்லையென்றால், பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக அவர்கள் பெற்றுக்கொண்டிருந்த ஊதியத்தை வழங்கவேண்டுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1989ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பெயரில் 13,500 பேரை பணியில் அமர்த்தியது. ஆனால், தி.மு.க. ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல, தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் வழக்கமாக இருந்தது.

2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இவர்கள் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையெதிர்த்து இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இவர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பையெடுத்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதில் பணியாளர்களுக்கு ஐந்து மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர். இதையடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த பால் வசந்த குமார், சத்யநாராயணா அடங்கிய அமர்வு, தமிழக பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் உருவாகும் பணியிடங்களில் இவர்களைப் பணியில் அமர்த்த வேண்டுமென உத்தரவிட்டது. அவர்களைப் பணியில் அமர்த்தும்போது வயதை மனதில் கொள்ளாமல் கல்வித் தகுதியின் அடிப்படையில் இவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.