“இந்திய அரசின் தனியார் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை”

இந்திய நிலக்கரி சுரங்கம் (ஆவணப்படம்) படத்தின் காப்புரிமை Getty
Image caption இந்திய நிலக்கரி சுரங்கம் (ஆவணப்படம்)

இந்தியாவில் 1993ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ‘நியாயமான வெளிப்படையான’ முறையில் நடைபெறவில்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று திங்களன்று தெரிவித்துள்ளது. அந்த நிலக்கரி ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும் இந்திய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதி மதன்.பி.லோகுர் மற்றும் நீதிபதி குரியன் ஜோஸ்ப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலக்கரி சுரங்கங்களை உடனடியாக ரத்து செய்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த நிலக்கரி சுரங்கங்களை ரத்து செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.

மாறாக இந்த நிலக்கரி சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்யத் தேவையான வழிமுறைகளை ஆராய, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழுவை நியமிக்கும்படி உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இது வெறும் பரிந்துரையே என்றும், இதைவிட சிறந்த திட்டம் இந்திய அரசிடம் இருக்குமேயானால் அதனை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இந்த சிறப்புக் குழுவை அமைக்க வேண்டுமா என்பது குறித்தும், இந்த நிலக்கரி சுரங்கங்களை மறுஒதுக்கீடு செய்யத் தேவையான வழிமுறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் மேலும் விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடுகள்

கடந்த 1993-2004 காலப்பகுதியிலும் 2006-2009 காலப்பகுதியிலும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இதுவரை மூன்று ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி முடித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை இருவதுக்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் (ஆவணப்படம்)

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான வழக்கு அதன் இறுதி கட்டத்தை எட்டியிருப்பது வரவேற்கதக்கது என்று கூறுகிறார் மத்திய நிலக்கரி துறை துணை அமைச்சர் பியுஷ் கோயல்.

"இதில் உச்சநீதிமன்றம் தனது இறுதி முடிவை எடுத்தவுடன் உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பதை நான் உறுதி படுத்துகிறேன். மக்கள் தேவைக்கேற்ப உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும். பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பிரச்சனை தற்போது இறுதி நிலையை அடைந்துள்ளது என்பது இந்திய பொருளாதாரத்துக்கு நன்மையை ஏற்படுத்தும்"என்றார் மத்திய நிலக்கரி துறை துணை அமைச்சர் பியுஷ் கோயல்.

இதற்கிடையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின்போது நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ‘நியாயமான வெளிப்படையான’ முறையில் செய்யப்படவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில், விளம்பரத்திற்கு பிறகே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின்போது விளம்பரங்கள் இல்லாமல், வெளிப்படைதன்மை இல்லாமல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அதேசமயம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் ‘நியாயமான வெளிப்படையான’ முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது சரியான தீர்ப்பு என்றும் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார்.

தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு 1,86,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி முன்னதாக தாக்கல் செய்திருந்த தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பிலான கணக்குகளை தணிக்கை செய்த அப்போதைய மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்புடைய சில நபர்களின் பெயர்களை, ஊழல் தொடர்பான அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என்று காங்கிரஸ் அரசு தனக்கு அழுத்தம் அளித்ததாக கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.