இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க 50 ஆண்டுகள் ஆகலாம்: யுனிசெப்

Image caption உலகில் பெண்களில் 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் 18 வயதுக்கு முன்னமே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள்

உலக அளவில் 70 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, அவர்களின் 18 வயதுக்கு முன்னமே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் யுனிசெஃப் அமைப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தியாவில் சிறார் திருமணங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் குறைந்துவந்துள்ள போதிலும், அந்த நடைமுறை வீழ்ச்சியடையும் வேகம் மெதுவாக உள்ளதால் இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று யுனிசெப் அமைப்பின் சிறார் திருமண ஒழிப்புப் பிரிவின் இந்திய அதிகாரி டோரா கியுஸ்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியாவில், 20- இலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 43 வீதமானோருக்கு சிறுமியராக இருக்கும் போதே திருமணம் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆனால் அங்கு சிறார் திருமண வழக்கத்தின் வீழ்ச்சி வேகம் ஆண்டுக்கு ஒரு வீதமாக உள்ளதாகவும் யுனிசெப் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வீழ்ச்சி வீதத்தின் அடிப்படையில், இந்தியாவில் சிறார் திருமணத்தை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது எடுக்கும் என்று கூறிய அவர், சிறார் திருமண வழக்கத்தை தடுக்கும் பணிகள் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சிறார் திருமணங்கள் பொதுவாக வட இந்தியாவிலேயே அதிகம் நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், சமீபத்திய அறிக்கைளின்படி, தெற்கு மாநிலமான கேரளாவில் சிறார் திருமணங்கள் சதவீதம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளாவில குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கேரளாவின் சில பகுதிகளில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது' என்றார் யுனிசெப்- இன் சிறார் திருமண ஒழிப்புப் பிரிவின் இந்திய அதிகாரி டோரா கியுஸ்டி.

கேரளாவில் குடியேறியுள்ள மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற ஐயம் உள்ள போதிலும், சரியான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைகள் தேவை என்றும் அவர் கூறினார்.