நாளந்தா பல்கலைக்கழகம்: வகுப்புகள் ஆரம்பம்

புராதன நாளந்தா பல்கலைக்கழக எச்சங்கள்
படக்குறிப்பு,

புராதன நாளந்தா பல்கலைக்கழக எச்சங்கள்

பிகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு பின்னர் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பித்துள்ளன.

தற்போது 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை தொடங்கி இருக்கிறது.

நாளந்தா பல்கலைக்கழகம் தொடக்கத்திற்கு சிறப்பு விழா எதுவும் தற்போது ஏற்பாடு செய்யப்படவில்லை.

இம்மாதம் 14ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளந்தா பல்கலைக்கழகத்தை பார்வையிடும் சமயத்தில் ஒரு சிறப்பான துவக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. திபத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அறிஞர்களும் இந்த பல்கலைகழகத்தால் ஈர்க்கப்பட்டனர் என்று வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வரலாற்றில் இரண்டு முறை அந்த பல்கலைக்கழகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

12ஆம் நூற்றாண்டில் இரண்டாவது முறை இந்த பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டபோது அப்பல்கலைகழகத்தின் நூலகம் தீயிடப்பட்டு பல மாதங்கள் எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான நூல்கள் இருந்தமையை குறிக்கிறது என வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த பண்டைய பல்கலைக்கழகத்துக்கு புத்துயிர் அளிப்பது பற்றி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006 ஆண்டில் யோசனையை முன்வைத்தார். அதையடுத்து 2010 ஆண்டில் நாளந்த பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து அந்த பல்கலைக்கழகம் உருவானது.

பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு நிதி உதவிகளையும் சேர்த்து சேர்த்து இந்த பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு ரூபாய் இரண்டாயிரத்தி எழுனூரு ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்காக பிகார் மாநில அரசு 443 ஏக்கர் அளவிலான இடத்தை ஒதுக்கியிருந்தது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புகழ் பெற்று திகழ்ந்த இந்த பல்கலைக்கழகம் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி அடையாத கிராமப்பகுதியில் எவ்வாறு உருவாக்கப்பட முடியும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் மதிப்புகளுடன் சமகால தேவைகளை இணைத்து செயற்படுவதே இந்த புதுபிக்கப்பட்ட நாளந்தா பல்கலைகழகத்தின் முக்கிய நோக்கம் என்று அந்த பல்லைக்கழகத் துணைவேந்தர் கோபா சமர்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘யேல்’ பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பும் தமக்கு கிடைத்திருப்பதாக துணை வேந்தர் கோபா சமர்வால் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டட மாணவர்கள் இங்கு பயில விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்கட்டமாக அவர்களில் 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு விடுமுறையில் வந்துள்ள ஒரு பூட்டான் பல்கலைக்கழக முதல்வரும் பெளத்த கல்வி குறித்த முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவரும் இந்த 15 மாணவர்களில் அடங்குவர்.

பேராசிரியர்களில் இரண்டு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்த யின் கெர் மற்றொருவர் அமெரிக்காவை சேர்ந்த சாம்யல் ரைட்.