உள்ளாட்சி இடைத் தேர்தல்: காங்கிரஸ், தே.மு.தி.க கட்சிகள் போட்டியிடவில்லை.

Image caption உள்ளாட்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடப்போவதில்லை என விஜயகாந்த் அறிவிப்பு.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன், “இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையம், தேதியை அறிவிப்பதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைக் கூட்டி விவாதிக்கவில்லை. தவிர, திடீரென ஆகஸ்ட் 28ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளதையும் மனதில் வைத்து இந்தத் தேர்தலில் போட்டியடப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக” கூறினார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இது போன்ற இடைத் தேர்தலைச் சந்திக்க இயலாத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவுக்கு தே.மு.தி.க. ஆதரவு

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சியாளர்களின் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப இடைத்தேர்தல் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்படுவதாகவும் ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற மரபு இருந்தாலும், இன்றைய ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளதாக”வும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலில் தே.மு.தி.க. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென ஏற்கனவே தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த்த் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.