"கல் கேபிள் நிறுவனத்தின் உரிமம் ரத்துசெய்யப்பட்டது செல்லாது"

Image caption மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் கல் கேபிள் தொலைக்காட்சி சேவையை சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் வழங்குவதற்கு தேவையான உரிமத்தை மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ரத்து செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை அளிப்பதற்கான எம்.எஸ்.ஓ. உரிமத்தை கல் கேபிள் நிறுவனம் பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்புதலை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதால், அதற்கு வழங்கப்பட் டிருந்த எம்.எஸ்.ஓ. உரிமத்தை ரத்துசெய்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நகரங்களுக்குமான மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடைகோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாக நடைபெற்றபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், எம்.எஸ்.ஓ. உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ரகசிய அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், “நாட்டின் பொருளாதார, பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார்.

கேபிள் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “எங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உரிமத்தை ரத்துசெய்ய மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தது சரியல்ல’’ என்று வாதிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கல் கேபிள் நிறுவனத்தின் சேவைகளை நிறுத்துவது தொடர்பான மத்திய அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கேபிள் நிறுவனம் மீது வேறு புகார்கள் இருந்தால் அதை சட்டப்படி விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.