"வழக்கில்லாமல் தண்டனையில் பாதியை சிறையில் கழித்தவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்"

இந்திய உச்சநீதிமன்றம் படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில் வழக்குக்காக காத்திருக்கும் நீதிமன்றக் காவல் கைதிகளில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு அதிகபட்சமாக வழங்கப்படக்கூடிய தண்டனையில் பாதியளவை சிறையில் கழிக்க நேர்ந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டாக வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சிறைகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதினாலும், ஏராளமான குற்றச்சம்பவங்கள் நெடுங்காலமாக வழக்கிற்கு வராமல் இருப்பதினாலும், அச்சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பது இந்த தீர்ப்பின் நோக்கங்களில் ஒன்று.

இந்தியாவில் உள்ள நாற்பது லட்சம் சிறைக்கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் மீது குற்ற வழக்கே கொண்டுவரப்படுவதில்லை என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

இந்திய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவின்படி ஒவ்வொரு மாவட்டத்தின் நீதித்துறை அதிகாரிகளும் அவர்களின் நிர்வாகத்தில் உள்ள சிறைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று பார்வையிட்டு, தாங்கள் புரிந்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை காலத்தில் பாதி தண்டனையை அனுபவித்து விட்ட விசாரணை கைதிகளை கண்டெடுத்து, அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் தேதியன்று துவங்கும் இந்த நடவடிக்கைகள் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற்று முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மாத நடவடிக்கை நிறைவு பெறும் சமயத்தில், எந்தெந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பிலான ஒரு அறிக்கையை உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்கள் உச்ச நீதிமன்றம் பொது செயலாளரிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிருபிக்கப்படும் வரை ஒருவர் அப்பாவி என்றே கருதப்பட வேண்டும் என்றும், பிணை அல்லது ஜாமீன் பெருவது ஒருவரின் உரிமை என்றும் சட்டத்தில் இருந்தாலும், பல விசாரணைக் கைதிகளால் சட்டத்தில் உள்ள வசதிகளை பெறமுடிவதில்லை. இதனால் சிறிய குற்றங்கள் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள் கூட, வழக்கு விசாரணைகள் மற்றும் காவல்துறை புலனாய்வு காரணமாக ஏற்படும் தாமதங்களால் கணிசமான காலத்தை சிறையில் கழிக்க நேரிடுகிறது.

இந்நிலையில் இன்று இந்த உத்தரவை பிறப்பித்த தலைமைநீதிபதி ஆர்.எம்.லோதா, சட்டம் மற்றும் நீதித் துறைக்கு மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கி, கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், உரிய நீதி, உடனடியாகக் கிடைக்கும் வகையில் விசாரணைகள் விரைந்து நடைபெற மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வரவேற்கத்தக்கது என்றும் குற்றம் நிரூபிக்கப்படாமல் தண்டனை பெற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அம்நெஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பின் இந்திய பிரிவின் செய்தி தொடர்பாளர் துர்கா நந்தினி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்