காணொளிக் காட்சி மூலம் ஆஜராக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுமதி

Image caption .வீடியோ இணைப்பு மூலம் சாட்சியளிக்க அனுமதி

தன் மீதான வழக்கில் வீடியோ கான்ஃபரன்சிங் எனப்படும் காணொளிக் காட்சி மூலம் ஆஜராவதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

1986ஆம் வருடம் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள முத்துஇருளாண்டி காலனியில் திருநாவுக்கரசு என்பவர் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் ஆஜராகாத நிலையில், 1996ல் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத, பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமெனக் கோரி அவர் தாக்கல் செய்த மனு அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி, கொழும்பிலிருக்கும் இந்தியத் தூதரகத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணை நீதிமன்றம் விரும்பும்போது, கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். இருந்தபோதும், விசாரணை நீதிமன்றம் எப்போதாவது நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அண்டை நாட்டின் அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த உத்தரவு வழங்கப்படுகிறது என்றும் வேறு வழக்குகளில் இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்ட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிணையில் வரமுடியாத பிடியாணை இருக்கும் நிலையிலும், 2010ஆம் ஆண்டில் அவர் சென்னை வந்து சென்றிருக்கிறார். அப்போது அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.