விமர்சிக்கும் ஊடகங்கள் குறித்து தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஊடகங்களுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை

தெலங்கானா மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவோர் அனைவரும் 10 அடி ஆழத்தில் புதைக்கப்படுவார்கள் என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியது இந்தியாவில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவதாக சில ஊடகங்களைக் குற்றம்சாட்டி பேசிய போது தான் சந்திரசேகர ராவ் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

ஹைதராபாத் உள்ளிட்ட தெலங்கானா மாநிலப் பகுதிகளில், ஒரு சில தெலுங்கு மொழி செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஒளிப்பரப்பு சேவை தடை செய்யப்பட்ட விவகாரம் குறித்தான சர்ச்சைகளும் அம்மாநிலம் முழுவதும் பரவி வருகின்றன. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான போராட்டங்கள் டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் கடந்த வாரம் முதல் நடந்துவருகின்றன.

குறிப்பாக தடை செய்யப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் போராட்டங்களில் ஈடுப்பட்டு கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

தொடரும் இது போன்ற போராட்டங்களுக்கு எதிராகவும், அந்த ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும் சந்திரசேகர ராவின் பேச்சு தற்போது அமைந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் உரையாற்றிய சந்திரசேகர ராவ், ஊடகங்களின் உரிமை என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் கூறினார்.

பல ஆண்டு போராட்டங்கள் மற்றும் தியாகங்களுக்கு பிறகு தனி மாநில அந்தஸ்தை தற்போது தான் பெற்றுள்ளதாகவும் கூறிய அவர், இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தனி மாநிலத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கில் சில தவறான செய்திகள் பரப்பப்படுவதை ஏற்க மாட்டோம் என்றும் கண்டனம் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்துதான் அம்மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவோரை 10 அடி ஆழத்தில் புதைத்து ஒழிப்போம் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழலில் இவரது கண்டனப் பேச்சுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட போது, மாநில முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவர் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்றார்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.