ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருநங்கையர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றதிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்திய ஒருபால் உறவாளர்களின் கோரிக்கை பேரணி (ஆவணப்படம்)

ஒருபால் உறவுக்காரர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களை ஒன்றாக இணைத்து ஒரே பிரிவாக பிற்படுத்தப்பட்டோர் என்று கூறி அரசு சலுகைகள் வழங்குவதில், நடைமுறைச் சிக்கல் இருப்பதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய சமூகத்தில் பல்வேறு ஒடுக்குமுறைகளை சந்திக்கும் திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அளிக்கும்படி கூறி இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை என்று கூறியும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீதான விசாரணை வியாழனன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் LGBT என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பொதுப்படையான அளவுகோல் குழப்பத்தை விளைவிப்பதாக மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது. (LGBT என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுவதன் விரிவாக்கம்-பெண்களை விரும்பும் பெண்கள், ஆண்களை விரும்பும் ஆண்கள், இருபாலாருடனும் உறவுகொள்பவர்கள் மற்றும் திருநங்கையர்).

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கத் தேவையான சட்டதிருத்தங்களை கொண்டுவரும்படி கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமது இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தியது தொடர்பிலான அறிக்கையையும் ஆறு மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அந்த தீர்ப்பு வழங்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போது மத்திய அரசு தரப்பில் அந்த தீர்ப்புக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த மாற்றுப்பாலினத்தவர்கள் குறித்த மத்திய அரசின் எதிர்ப்பின் வெளிப்பாடே என்று விமர்சிக்கிறார் ஒருபால் உறவுகாரர்கள், மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தேசிய செயல்பாட்டாளர்களில் ஒருவரான திருநங்கை ரோஸ் வெங்கடேசன். மாற்றுப்பாலினத்தவர்களுக்கு காலம் கடந்தேனும் உச்சநீதிமன்றம் உதவ முயன்றாலும் அதை பல்வேறு வகைகளிலும் மத்திய அரசு தடுக்கப்பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.