'காஷ்மீரில் வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம்'

Image caption காஷ்மீர் வெள்ள நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

காஷ்மீர் மாநிலத்தில் கடும் மழையால் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது நீர் மூலம் பரவும் நோய்கள் பரவக்கூடும் என்றும் அதனை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து இதுவரை 1.80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தால் இதுவரை 480க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த சில தினங்களாக வெள்ள நீரின் கடுமை குறைந்து வருகிறது என்றாலும், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. அங்கு தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

உயிரிழந்த விலங்குகளின் உடல்கள், அழுகிய காய்கறிகள், நிரம்பி வழியும் வடிகால்கள் மற்றும் பிற அழுக்குகளால் அங்கு துர்நாற்றம் அதிகரித்துள்ளதாக காஷ்மீரிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள சுகாதார நிலைமையை மேற்பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிறன்று காஷ்மீருக்கு விஜயம் மேற்கொண்டார். அம்மாநிலத்தின் சுகாதார துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதார துறை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இன்னமும் வெள்ள நீரில் பல பகுதிகள் மூழ்கியுள்ளயதாகவும், வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்குவதில்தான் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் படை இயக்குனர் ஜெனரல் ஓபி சிங், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் ஒன்று பரவிவிடுமோ என்பதே தற்போதைய மிக பெரிய கவலை என்றும் தேசிய பேரிடர் படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.