"நீர்க் கசிவு அதிகரிப்பினால் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பில்லை"

Image caption கசிவு நீரின் அளவு அதிகரித்திருப்பதால் அணைக்குப் பாதிப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கசியும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் பாதிப்பு இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் திங்கட்கிழமையன்று மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவினர் ஆய்வுசெய்தபோது, அணையிலிருந்து கசியும் நீரின் அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று 5 உறுப்பினர்களைக் கொண்ட துணைக் குழுவினர் அணையை ஆய்வுசெய்தபோது, அணையிலிருந்து கசியும் நீரின் அளவு நிமிடத்திற்கு 70 லிட்டராக இருந்தது. ஆனால், அடுத்த பத்து நாட்களில் கசிவு நீரின் அளவு, 90 லிட்டராக உயர்ந்துள்ளது.

இருந்தபோதும், இதனால் அணையின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லையென உயர் மட்டக் குழுவின் தலைவரான எல்.ஏ.வி. நாதன் தெரித்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையில் நீரின் கசிவு அதிகரித்திருக்கும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து, தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் கேட்டபோது, முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, அணையிலிருந்து கசியும் நீரின் அளவு நிமிடத்திற்கு 250 லிட்டர் வரை இருக்கலாம் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதாலேயே, கசிவு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.

உண்மையில் இப்படி நீரின் கசிவு அதிகரிப்பது, அணைக்குப் பாதுகாப்பாகவே அமையும் என்கிறார் அவர். இதன் மூலம், அணையில் ஏற்படும் அழுத்தம் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

1970களின் இறுதியில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு கேள்வியெழுப்பியதிலிருந்து அணை மூன்று கட்டங்களாக பலப்படுத்தப்பட்டது.

மத்திய நீர் வளத்துறையின் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக அணையின் மீது காங்க்ரீட் தொப்பி அமைக்கப்பட்டது. அதன் பின் அணையின் வெளிப்புறத்தில் காங்க்ரீட் போர்வை போர்த்தப்பட்டது. அதன் பிறகு, நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில், 9 அடி இடைவெளியில் அணையின் மேலிருந்து அணைக்குக் கீழே 40 அடி ஆழம் வரை துளைகள் இடப்பட்டு கம்பிகள் இறக்கப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டது.

இதனால், முழு உயரமான 155க்கு நீரை நிரப்பினால்கூட பாதிப்பில்லை என்கிறார் வீரப்பன். பென்னி குயிக் கட்டியபோது இருந்ததைவிட, தற்போது அணை பலமாகவே இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இருந்தபோதும், அணையிலிருந்து கசிந்த நீரில் அணையைக் கட்டப் பயன்பட்ட சுர்கி எந்த அளவுக்கு இருந்தது என்பதை அறிய வேதியியல் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.