சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்கள் இந்தியா வந்தடைந்தார்

சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அவர்கள் இந்தியா வந்தடைந்தார் படத்தின் காப்புரிமை epa
Image caption சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அவர்கள் இந்தியா வந்தடைந்தார்

3 நாள் அரசு முறை பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை, அம்மாநில முதல்வர் ஆனந்தி பென், ஆளுநர், உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று புதனன்று தனது 64வது பிறந்த நாளை அகமதாபாத்தில் கொண்டாடும் வேளையில், சீன அதிபரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகள் இடையிலான உறவு, வர்த்தகம், முதலீடு, எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதி தொடர்பில் பிரச்சினைகளும் அழுத்தங்களும் இருந்த போதிலும், தென் ஆசிய பிராந்தியத்தில் செல்வாக்கு தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையே போட்டிகள் நிலவும் போதிலும், இந்தியாவுடனான பில்லியன் டாலர்கள் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை சீனா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty

இந்தியாவின் புதிய வணிக சார்பு பிரதமர் நரேந்திர மோடியுடனான உறவுகளை வலுப்படுத்த சீனா பல ஒப்பந்தங்களை கையெழுத்திடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும், சீனாவும் உறவை வலுப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தினால், இரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

திபெத் ஆதரவாளர்கள் போராட்டம்

திபெத் ஆதரவு செயற்பாட்டாளர்கள் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள சீன தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது என்றும் சீனாவில் இருந்து திபெத் சுதந்திரம் பெற வேண்டும் என்றும் கோரி சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.