இந்தியாவில் கிளை அமைக்கும் அல்கைதாவின் 'கனவு பலிக்காது': மோடி

படத்தின் காப்புரிமை Getty
Image caption 'இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து இந்தியாவுக்காகவே உயிர்கொடுப்பார்கள்'

இந்தியாவில் கிளை ஒன்றை அமைக்கும் அல்கைதாவின் திட்டத்தை நிராகரித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய முஸ்லிம்கள் அல்கைதாவின் 'தாளத்துக்கு ஏற்ப ஆடுவார்கள்' என்று நினைத்து அந்த அமைப்பினர் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

'இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து இந்தியாவுக்காகவே உயிர்கொடுப்பார்கள்' என்று நரேந்திர மோடி சிஎன்என் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அல்கைதா இயக்கத்தினர் தமது 'ஜிகாத் கொடியை பறக்கவிடுவார்கள்' என்று அல்கைதா தலைவர் ஆய்மான் அல் ஜவாஹிரி இந்த மாதத்தின் முற்பகுதியில் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அல்கைதா இயக்கத்திற்கு இந்தியாவில் இயங்குதளம் இல்லாதபோதிலும், காஷ்மிர் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் அதிருப்தி அடைந்துள்ள முஸ்லிம் இளைஞர்களை நாடுவதற்கு அந்த இயக்கம் முயன்றுவருவதாக கவலைகள் உள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

'எங்கள் நாட்டின் முஸ்லிம்களுக்கு அவர்கள் அநீதி இழைக்கின்றார்கள் என்று தான் நான் கருதுகின்றேன்.... இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும் எதனையும் விரும்ப மாட்டார்கள்' என்றார் நரேந்திர மோடி.

இந்தியாவில் காஷ்மிர் பிரிவினைவாதிகளுடன் பெரும்பாலும் தொடர்புடைய இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், பாகிஸ்தானிலிருந்து இயங்கும் குழுக்கள் ஊடாக அல்கைதாவுடனும் தொடர்புவைத்துள்ளன.

இஸ்லாமிய குழுக்களிடமிருந்து ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தலை ஒருநாட்டுக்கோ இனத்துக்கோ எதிரான பிரச்சனை அல்ல என்றும், அது மனித குலத்துக்கே எதிரான பிரச்சனை என்றும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.