ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம் பற்றியும் விசாரணை: சிபிஐ

  • 22 செப்டம்பர் 2014
ப.சிதம்பரம்
Image caption ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் எந்த அடிப்படையில் சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்பதையும் சிபிஐ விசாரித்து வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்தான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க அழுத்தம் தரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மீது நடக்கும் வழக்கின் விசாரணை திங்களன்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் கே.கே.கோயல் இன்று ஆஜராகி வாதாடியபோது, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பொறுப்பு வகித்த காலத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் சிபிஐ அதிகாரி இன்று நீதிமன்றத்தில் அதன் விவரங்களை அளித்தார்.

அதில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு ரூபாய் 3,500 கோடி அளவுக்கு வெளிநாட்டிலிருந்து முதலீடு செய்யப்பட்டது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 72 பக்கமுள்ள குற்றப்பத்திரிக்கையிலும் சில விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏர்செல் நிறுவனத்தில் மொரீஷியஸ் நாட்டிலிருந்து இயங்கும் குளோபல் கம்யூனிகேஷன்ஸ் ஹோல்டிங்ஸ் என்கிற மேக்சிஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனம் ரூபாய் 4800 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அதில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ரூபாய் 600 கோடி அளவுக்கான முதலீடுகளுக்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளிக்க அதிகாரம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை தான் ஒப்பதல் அளிக்க முடியும் என்றும், ஆனால் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் எந்த அடிப்படையில் சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்பதையும் சிபிஐ விசாரித்து வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மூத்த சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சிபிஐ அந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கின் விசாரணையில், சிபிஐ தரப்பு திங்களன்று இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதேசமயத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஒ.பி.சாயினி, சன் டைரக்ட் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான காவேரி கலாநிதியை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளபோதும், அவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.