இந்தியாவில் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் வழக்கம் அதிகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் கழிப்பறையிருந்தும் திறந்த வெளிக்கு செல்கின்றனர்: புதிய அறிக்கை

கழிப்பறைகள் கட்டுவதால் மட்டும் இந்தியாவில் திறந்த வெளியில் மக்கள் மல-ஜலம் கழிக்கின்ற அவலம் நின்றுவிடாது என்பதற்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கழிப்பறை வசதி இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் திறந்த வெளிகளுக்கு செல்லும் வழக்கம் கணிசமான மக்களிடையே காணப்படுவதாக மனிதாபிமான பொருளாதாரத்துக்கான ஆராய்ச்சி மையம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகிலேயே திறந்த வெளியில் மல-ஜலம் கழிக்கும் வழக்கமுள்ள மக்கள் அதிகமுள்ள நாடு இந்தியாதான்.

இந்தியாவில் கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை அறுபது சதவீதமான வீடுகளில் கழிவறை இல்லை என்றும், இதுவே நகர்ப்புறங்களில் 10 சதவீத வீடுகளில் கழிவறை இல்லை என்றும் தேசிய சுற்றாய்வு மையத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் காட்டுகின்றன.

கழிவறை இருக்கும் நாற்பது சதவீத வீடுகளிலுமேகூட ஏழு சதவீத குடும்பங்கள் அந்தக் கழிவறையை பயன்படுத்தாமல் திறந்த வெளிகளுக்கு செல்கின்றனர் என்று மனிதாபிமான பொருளாதாரத்துக்கான ஆராய்ச்சி மையம் நடத்தியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல குடும்பத்தில் ஒருவராவது அந்த கழிவறையைப் பயன்படுத்தாத நிலைமை 18 சதவீத குடும்பங்களில் காணப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசாங்கம் கட்டிக்கொடுக்கின்ற கழிவறை இருந்தும் அவற்றை மக்கள் பயன்படுத்தாமல் போகின்ற நிலைமைக்கான காரணம் என்ன?

கழிவறை அமைத்துத்தருதல் மற்றும் கழிவறை பயன்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்துவரும் ஆர்க்யம் என்ற அமைப்பில் பணியாற்றும் அமிர்தா கஸ்தூரிரங்கன், நாடெங்கிலும் கழிவறைகள் அமைத்துத்தருவதில் ஈடுபட்டுள்ள சுலப் அமைப்பிற்காக சென்னையிலிருந்து பணியாற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் கருத்துகள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.