மக்கள் நலப் பணியாளர்கள்: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

படத்தின் காப்புரிமை AFP
Image caption மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை.

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரப் பணி நியமனம் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜரான ஹரீஷ் குமார், கிராமங்களில் வசிப்பவர்களுக்கு கிராமங்களிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கி, அவர்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்கும் விதத்தில், 1989ல் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அரசுகள் மாறும்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும், மீண்டும் சேர்க்கப்படுவதுமாக இருக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, அவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகத்தான் சேர்க்கப்பட்டனர். எனவே அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க முடியாது என வாதிட்டர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான மதிவாணணிடம் கேட்டபோது, எங்கள் தரப்பு வாதங்களை முழுமையான முன்வைப்போம். இழந்த சலுகைகளையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பெயரில் 13,500 பேரை பணியில் அமர்த்தியது.

ஆனால், ஆட்சி மாறியபோது இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது முதல் ஆட்சி மாறும்போதெல்லாம் இந்தப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் மீண்டும் சேர்க்கப்படுவதும் நடந்துவருகிறது.