அத்துமீறி நுழைந்த வாலிபரைக் கொன்றது வெள்ளைப் புலி

புலியால் கொல்லப்பட்டவரின் இறுதி தருணங்கள்
Image caption புலியால் கொல்லப்பட்டவரின் இறுதி தருணங்கள்

டில்லி உயிரியல் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படிருந்த ஒரு வெள்ளைப் புலி தாக்கியதால், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மதியம் உயிரழந்தார்.

விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெள்ளைப் புலி அடைத்து வைக்கப்படிருந்த பாதுக்காப்பு பகுதிக்குள் அத்துமீறி இளைஞன் நுழைந்ததாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி உயிரியல் பூங்காவின் இயக்குனர் அமிதாப் அக்னிஹோத்ரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உயிரிழந்த அந்த இளைஞனின் பெயர் மக்சூத் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டில்லியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன், அடைக்கப்பட்ட பாதுக்காப்பு வேளியை தாண்டி குதித்ததால் தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரில் பார்த்த சிலரும் இந்த தகவலை உறுதி செய்யும் வேளையில், அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துக் கொண்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றார்கள்

இந்த சம்பவம் இன்று மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்ததாகவும், புலியிடம் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை மீட்க எவரும் உதவ முடியாத நிலை நீடித்ததாகவும் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டவர்கள் கூறினார்கள். எனினும் அங்கிருந்த சில இளைஞர்கள் அந்த மிருகத்தின் மீது கற்களை வீசினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் வேகமாக அழிந்து வருகின்றன. புலிகளின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலேயே வெள்ளைத் தோல்கொண்ட புலிகள் பிறக்கின்றன. இவை மிகவும் அரிதானவை.