214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து

 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து படத்தின் காப்புரிமை
Image caption 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து

இந்தியாவில் 1993 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்களை இன்று புதன்கிழமை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

தன்னிச்சையான முடிவுகளால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்களில், நான்கு உரிமங்களை மட்டும் ரத்து செய்யாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சார்ந்த மற்றும் கூட்டு முயற்சி முதலீடுகள் இல்லாத நிறுவனங்களான தேசிய அனல் மின் நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அந்த நான்கு உரிமங்கள் தொடர்ந்து அவர்களுக்கு நீடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹ்தகி இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இந்த வழக்கு குறித்து பேசுகையில், முறையற்ற முறையில் நடைபெற்ற ஒதுக்கீடுகளை நீடிக்க அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் செயல்பாட்டில் உள்ள 40 நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் செயல்பட துவங்கவுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களில், 42 சுரங்கங்கள் மட்டும் ஆறு மாதக் காலத்தில் பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். செயல்பாட்டில் உள்ள அந்த சுரங்கங்களை பாதுக்காக்க்கும் நோக்கதிற்காக, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஆறு மாதக் காலத்திற்கு செயல்படும் இந்த சுரங்கங்களில் எடுக்கப்படும் ஒரு டன் அளவு நிலக்கரிக்கு, ரூபாய் 295 விதம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் முகுல் ரோஹ்தகி கூறினார். அத்தோடு இந்த இடைப்பட்ட காலத்தில், ஆறு மாத காலத்திற்கு நீதிமன்ற அனுமதியுடன் செயல்படும் சுரங்கங்களில், எவையெல்லாம் ஏலத்திற்கு விடப்படும் என்பது தொடர்பில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.