இந்தியாவில் தயாரிப்புத் துறையை ஊக்குவிக்க புதிய திட்டம் தொடக்கம்

படத்தின் காப்புரிமை MAKE IN INDIA
Image caption 'மேக் இன் இந்தியா'-- இந்தியாவில் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கத் திட்டம் தொடங்கியது

இந்தியாவில் தயாரிப்புத் தொழில்துறையை ஊக்குவிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவதை நோக்கமாகக் கொண்ட 'மேக் இன் இந்தியா' திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், கார் தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, மரபு சாரா எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் போன்றவை உள்ளிட்ட 25 துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்க அதிகார வர்க்கத் தடைகளைக் குறைத்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சில தொழிலாளர் நலச் சட்டங்களை தளர்த்த, இத்திட்டம் உறுதி கூறுகிறது.

‘மேக் இன் இந்தியா' துவக்க விழாவில், வர்த்தக துணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, சிரஸ் மிஸ்ட்ரி, ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது என்றும் வர்த்தகத் துறை துணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.