அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

அ.தி.மு.க சட்ட உறுப்பினர்கள் கூட்டம் படத்தின் காப்புரிமை admk.org
Image caption அ.தி.மு.க சட்ட உறுப்பினர்கள் கூட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக வரக்கூடிய தமது கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவரை அவர்கள் இன்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சட்டமன்றக் குழுத் தலைவராக வரக்கூடியவரே அடுத்த முதலமைச்சராகவும் பதவியேற்கலாம்.

இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு தடை கோரி, அவர் தரப்பில் நாளை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

பிணை வழங்க கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது தரப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

கருணாநிதி மீது வழக்கு

அதேவேளை, அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்த தி.மு.கவினரை தூண்டியதாக தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை பகுதியில் நேற்று தி.மு.கவினருக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையில் நடந்த மோதலையடுத்து இவர்கள் இருவர் உட்பட 50 பேர் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.